Thursday, July 31, 2008

முதல் காதல்


காதல் இல்லாமல் கவிதையும் இல்லை!
பாவை இல்லாமல் பாட்டும் இல்லை!
இல்லை என்பவரிடம் வாதம் செய்ய விரும்பவில்லை -
ஏனெனில் என் கிறுக்கலுக்குப் பின்னால் காதலும் உண்டு!
பாட்டுக்குப் பின்னால் பாவையும் உண்டு!
ஆராய்ச்சி வேண்டாம் - என் முதல் காதல்
அகத்திய முனியின் அருமை மகள் மீது மட்டும்!

உன் மனதோடு மட்டுமே !!!


கடலோடு கரைந்தாலும் மழைத் துளியாய் உன் மடி மீது!
வெயிலோடு வீழ்ந்தாலும் விடியலாய் உன் வாசலில்!
மண்ணோடு மரித்தாலும் மண்வாசனையாய் உன் மனதோடு மட்டுமே !!!

நினைவுகள்


உன் நினைவுகள் நீரில் படர்ந்த பாசி போல
எத்தனை முறை விலக்கிவிட்டாலும் வந்து ஒட்டிக் கொள்கின்றன!

கவிதைத் தாள்


நான் கவிதை தாங்கும் புத்தகமா என்ன-
உன் விழி பட்ட பக்கம் எல்லாம் என் கவிதை பக்கங்கள்!

காதல் தோல்வி


தோல்விகளில் மட்டுமே வெற்றி
காதலும் என்னைக் காதலிக்கவில்லை போல்!

முதல் மயக்கம்


ஆயிரம் முறை உன் முகம் கண்டு மகிழ்ந்து இருந்தாலும்
உன் முதல் பார்வை தந்த மயக்கம் மட்டும் மறு பிறவி வரை மனதோடு!

காதல் கல்லறை


பழி ஏனடி விதியின் மீது
உன் விழி செய்த சதி அன்றோ?!
கல்லுக்கும் கடலுக்கும் கூட என் காதல் புரிய ,
உனக்கு ஏனடி என் காதல் புரியவில்லை
இன்று கல்லறையில் வைத்த பூவை அன்றே என்னிடம் கொடுத்திருந்தால்
நான் மட்டும் இல்லை என் காதலும் உயிரோடு!

காமமும் காதலும்


காமம் இல்லாத காதல், அது கற்பனை கலந்திடாத கவிதை
கற்பனை கலக்கும் போது தான் கவிதையும் அழகு
ஆம் பெண்ணே ,
உன் இதழும் என் இதழும் சேர்த்தே இனி வார்த்தைகள் பேசுவோம்
காது மடல் ஓர மூச்சில் தணல் மூட்டுவோம்
வியர்வை கொண்டே குளிரும் காயுவோம்
உன் சேலைக்குள் நானும் , என் சட்டைக்குள் நீயும் உடை மாற்றுவோம்
காயம் செய்து குதூகலிப்போம்!
விரல் கொண்டு மேனியில் ஓவியம் தீட்டுவோம்
குளிப்பித்து அழுக்காகும் கலை கற்போம்
வாத்சயனற்கும் வித்தை கற்பிப்போம்
வெட்கத்தையும் வெட்கப்பட செய்வோம் இனி
இனி கலைந்த சேலையும் காய்ந்த பூக்களும் நடந்தேறிய கதை காலையில் சொல்லட்டும்!

முத்தமிழ் அழகி


உன் கயல் விழி பேசும் மொழிக்கு முன்னால்
இயல் தமிழும் என்ன செய்யும்
உன் கொலுசின் சிணுங்கலுக்கு முன்னால்
இசைத் தமிழும் இல்லாமல் போனதடி!
உன் நடை என்னும் நாடகம் கண்டு
நாடகத் தமிழும் நாணம் கொண்டதடி
உன்னால் இன்று முத்தமிழுக்கும் கர்வபங்கம்!

தேவதையிடம் கேட்ட வரம்


தேவதையே உன்னை கணப் பொழுதும் பிரியாத வரம் ஒன்று வேண்டும்!
தேவதையே அதை நீயே தருவாய்!
உன் இமையோடு மையாக வேண்டும்!
உன் இடை தொடும் உடையாக வாழ்ந்திட வேண்டும்!
உன் நெற்றி சுருளும் முடியாக வேண்டும்!
உன் கால் சிணுங்கும் கொலுசாக வேண்டும்!
உன் கண்ணம் தொடும் நீராக வேண்டும்!
முதுமையிலும் உன் விரல் பற்றி நடந்திட வேண்டும்!
மரணம் நேர்ந்தாலும் உன் மடி மீது வேண்டும் !!!!

நேரம்


காலத்தையும் உன் கண்ணோடு கலந்துவிட்டேனடி!
இனி நேரமும் உன் கண்ணின் மணி கொண்டு மட்டுமே!

நீ பிறந்த பின்னே இந்தப் புவி அழகு
நீ நடந்த பின்னே இந்தப் பாதையும் அழகு!
நீ சூடிய பின்னே பூவும் அழகு
உன்னோடு வாழ்ந்த பின்னே தான் என் வாழ்வும் அழகு!

வேல் கொண்டு நடை பழகிய இனம் எங்கள் தமிழ் இனம்!
புரவி கொண்டு களிறு கொன்று போர் புரிந்த இனம்!
விழுப்புண் கொண்டே வீரத்தை அளக்கும் எங்கள் இனம் ஐயா!
வேங்கையை முறம் கொண்டு விரட்டிய இனம் எங்கள் தமிழ் இனம்
மார் தட்டிய காலமெல்லாம் ஏட்டோடு , இன்று
லஞ்சத்தை கண்டு குருடனாய் , ஊழலை கண்டு செவிடனாய்
மரித்தாலும் மானமோடு வீரவேல் என்று கர்ஜித்த தமிழனும் இன்று தொலைக்காட்சிக்கு முன்னே தூங்கும் துயரமும் இங்கே!

Wednesday, July 23, 2008


உன் விழியின் வலிமை கொண்டு
வல்லினம் கற்பித்தாய்!
உன் பூவிதழ் மென்மை கொண்டு
மெல்லினமும் கற்பித்தாய்!
பெண்ணே உன் இல்லாத இடை கொண்டு
இடையினம் எப்படி கற்பிப்பாய்?

வளைவுகள் ஜாக்கிரதை


வளைவுகள் ஜாக்கிரதை
மலைப் பாதையென அவள்!

அன்னை


துன்பம் வரும் வேளை எல்லாம் என் துயரம் தீர்க்க மீண்டும் ஒரு முறை
என்னைக் கருவறைக்குள் சுமப்பவள்!

Tuesday, July 22, 2008

புதுமைப் பெண்


வரதட்சணை டாலர்களில் மற்றும்
பாரதியின் புதுமைப் பெண்!

Monday, July 21, 2008

என் தோழிக்கு !!!


இது தான் காதல் என்று எடுத்துக் கூறவும் இயலவில்லை
இவை தான் என்று பிரித்துப் பார்க்கவும் புரியாதவன்
பெண்ணே என்னிடம் ஏனடி காதலும் கொண்டாய்
கல் நெஞ்சுகாரன் , காயம் செய்தேன் உன் மனதை
உனக்கென்ன பெண்ணே அழுது விட்டாய் ,
ஆண் மகன் என்ற ஆணவம் அடக்கிக் கொண்டேன்
சரி என்றோ பிழை என்றோ எடுத்துக் கூறவும் ஆள் இல்லை
இன்று மனவேதனையுடன் மணவறையில் நீ
விடை தெரியா வினாக்களுடன் பிணவறை வரை நான் !!!!

காற்றென பறக்கும் காட்டுக் குதிரையடி நான்!
உன் கார்குழல் கொண்டு கையகப் படுத்த நினைப்பதும் சரியோ ?
வைகிங் வீரன் எனப் பாயும் பாய்மரம் நானடி!
உன் பனிப் பார்வை கொண்டு கவிழ்ப்பதும் முறையோ ?
உன் விழிச் சுழலில் காதல் வலை விரித்ததும் போதும் பெண்ணே
காதல் என்னும் குண்டு சட்டியில் ஓடும் குதிரை அல்ல
காற்றெனவே உன் காதலும் கரையும்!

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்றான் அய்யன் அன்று!
எதற்கும் உண்டு தாழ் இன்று , பணம் என்னும் தாள் வடிவில்!

Tuesday, July 15, 2008


இந்தியன் என்பதில் மட்டும் இல்லை ,
நாத்திகன் என்று சொல்லிக் கொள்வதிலும் பெருமை தான்
ஊர் எங்கும் மதக் கலவரம்!

நாளைய தலைமுறை...


நண்பர்கள் இணைய தளத்தில் மட்டும்
நலம் விசாரிப்பு மின்னஞ்சல் வாயிலாக மட்டும்
வந்தாலும் வரவேற்றாலும் தோழி என்கிறான்
கண்டாலும் கேட்டாலும் காதல் என்கிறான்
தந்தைக்கு பிள்ளைப் பாசம் மட்டும் வெப் கேமரா வழியாக
கலாச்சார சீரழிவு என்கின்றனர் முந்தைய சந்ததியினர்
காலத்தின் முன்னேற்றம் என்கின்றான் இவனோ
கலாச்சாரத்தை ஊனமாக்கி விட்டு ஏணியில் ஏறுவது முன்னேற்றமா ?
நாளைய சமூகத்தை வழி நடத்த தவறிவிட்ட குற்றத்துடன்
இன்று குற்றவாளி கூண்டில் என்னைப் போன்ற இளைஞர்கள் , கணினிக்கும் , கனவுக்கும் இடையில்!

உலகமயமாக்குதல் - வெற்றி எய்ட்ஸ் நோய்க்கு மட்டுமே

Friday, July 11, 2008

முதிர் கண்ணி


அறுபதாம் கல்யாணம் ஆதங்கத்துடன் ஆசி பெற வந்தாள் முதிர் கண்ணி

விலைமகள்


இது கரும்பு திண்ண பெறும் கூலியா என்ன
இது இவள் கொடுத்த விலை , மகள் பசி தீர்க்க

கற்றது தமிழ்
விற்பது மாற்றான் மொழி அன்றோ
வறுமையில் தமிழன் மற்றும் அன்று தமிழும் தான்

பொய் சொல்லாதே என்றாள் அன்னை
ஏன் அம்மா என்றேன் வெகுளியாய்
சாமி கண்ணை குத்தி விடும் என்றாள் வாஞ்சையுடன்!
சாமி கண்ணை குத்தியதாக செய்தி இல்லை
ஆயினும் நேர் வழி கொண்டு வாழ்பவர்கள் எல்லாம்
இன்று கண் இருந்தும் குருடனாய்
இந்த பொய்யர்கள் உலகத்தில்!

Thursday, July 10, 2008


25 வயது முடிந்து விட்டது , ஆம் அலெக்சாண்டர் உலகையே புரட்டிப் போட்ட வயது ....சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு ஒரு புறம், ஆனால் அரை சாண் வயிறு என்னை அந்நியனிடம் அடி பணிய வைத்தது , அடி பணிந்தாலும் முதுகெழும்பு இல்லாமல் போய் விட வில்லை. அடகு வைத்தது மூளையை மட்டும் தான், கனவுகளை அல்ல, அது வரை பாரதி கண்டவை கனவுகளாக மட்டும் என்னுள்!


லட்சியத்தின் பாதையில் சில லட்சங்கள்
சறுக்கி விழுந்தேன்